இந்த கோவில் குறித்து திருஞானசம்பந்தர் பாடி இருந்த போதிலும், கோவிலில் காணப்படும் கல்வெட்டுகள் சம்பந்தர் காலத்துக்கு பிந்தியவை. சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் (கி.பி.946 -966) என்ற பாண்டிய மன்னனின் இரண்டாம் ஆட்சி ஆண்டு பற்றிய கல்வெட்டு ஆகும். தாசி ஒருவர் விளக்கு எரிப்பதற்காக தினமும் ஆழாக்கு நெய் வழங்க தானம் அளித்த செய்தியை தருகிறது. இந்த கல்வெட்டு இறைவனை, “திருநெல்வேலி பிரம்மபுரித் தேவர்” என குறிப்பிடுகிறது.
மூல மகாலிங்கர் கோவிலில் சோழன் தலைக்கொண்ட வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் கல்வெட்டுகள் உள்ளன. இவை அனைத்தும் 10-ம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டவை. இந்த கல்வெட்டுகள் வட்டெழுத்தில் உள்ளன. இவை விளக்கெரிப்பதற்காக தானம் வழங்கிய செய்தியை குறிப்பிடுகின்றன.
முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012-1044), முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070-1120) போன்ற சோழ மன்னர்களுடைய காலத்தை சார்ந்த கல்வெட்டுகள், இந்த கோவிலில் முதல் திருச்சுற்றில் உள்ள வட்டத் தூண்களில் காணப்படுகின்றன.
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் (கி.பி.1190-1267) என்ற பாண்டிய மன்னன் கொடுத்த நில தானம் பற்றிய கல்வெட்டில் இந்த கோவில் இறைவனை, ‘திருநெல்வேலி உடையநாயனார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சுந்தரபாண்டியன் (கி.பி.1216-1244), விக்கிரம பாண்டியன் (கி.பி.1250-1276), வீரசோமேசுவரன் (கி.பி.1238-1258), இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1251 திருவாதிரை திருவிழா நடனம் பற்றியது), இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1258-1265), முதலாம் மாறவர்மன் குலசேகரன் (கி.பி. 1258-1308 திருச்சுற்று மதில் எழுப்பியது), முந்திகோட்டு வீரம் அழகிய பாண்டிய தேவன் (பொல்லாப் பிள்ளையார் சன்னதி உருவாக்கம்), பராக்கிரம பாண்டியன் (வேணுவனநாதர் எனும் பெயர் இடம் பெற்ற முதல் கல்வெட்டு), வீரசங்கிலி மார்த்தாண்டவர்மன் (கி.பி. 1546-இசைத்தூண் மண்டபம் உருவாக்கம்) போன்றோரின் கல்வெட்டுகளும் காணப்பட்டு உள்ளன.
மதுரை மீனாட்சி-சொக்கநாதர் கோவிலை விட இந்த கோவில் பெரிய கோவில் ஆகும். மதுரை மீனாட்சியம்மன் கோவில் 12 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆனால், நெல்லையப்பர் கோவில் 14 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இது சிற்பக்கலையின் சிகரம் என்றே சொல்லலாம். இந்த கோவில் 5 கோபுரங்களுடன் விளங்கும் ஒரு பெரிய கோவில் ஆகும். ஊருக்கு நடுவில் 850 அடி நீளமும், 756 அடி அகலமும் கொண்ட ஒரு விரிந்த இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. சுவாமி சன்னதி கோபுரத்தை விட, அம்பாள் சன்னதி கோபுரம் அழகுற வாய்ந்துள்ளது. கோவிலுக்குள் இருக்கும் பொற்றாமரை தீர்த்தக்கரையில் நின்று பார்த்தால் அம்பாள் சன்னதி கோபுரத்தின் கம்பீரமும், அழகும் தெரியும்,
இங்குள்ள பொற்றாமரை குளத்தில் இறைவனே நீர் வடிவாகவும், பிரம்மன் பொன் மலராகவும் பூத்த புண்ணிய தடாகம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மேலும் இந்தியாவிலேயே மிக நீளமான சுவாமி சன்னதி வீதி (ரோடு) அமைந்துள்ளது நெல்லையில் மட்டுமே.
சுவாமி சன்னதியின் மேற்கு பக்கத்தில் ஆறுமுக நயினார் சன்னதியில் ஆறுமுகப்பெருமான் மயில்மேல் அமர்ந்திருப்பது ஒரே கல்லில் ஆன சிலை ஆகும். 6 திருமுகத்தையும் பக்தர்கள் சுற்றி வந்து பார்த்து வணங்கலாம்.
நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும் என்பார்கள். திருவிழாக்கள் தோறும் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளுவதற்கான உள்ள பல வாகனங்களும் வேறெங்கும் இல்லாத வகையில் மிகவும் அழகானவை.
நெல்லையப்பர் கோவிலில் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் என 5 தேர்கள் உள்ளன. இதில் சுவாமி தேர் தமிழ்நாட்டிலேயே 3-வது பெரிய தேர் ஆகும். அதாவது திருவாரூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் தேர்களுக்கு அடுத்தப்படியாக நெல்லையப்பர் சுவாமி தேர் 3-வது பெரிய தேர் ஆகும். 1,505-ம் ஆண்டு பெரிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. தேர்கள், டவுன் ரதவீதிகளில் வலம் வரும் அழகை காண கண் கோடி வேண்டும். டவுன் ரத வீதிகள் அரியநாயக முதலியாரால் வகுக்கப்பட்டது.
இரட்டை கருவறைகளில் வேணுவன நாதர், நெல்லை கோவிந்தர் ஆகியோர் உள்ளனர். தை அமாவாசை அன்று 10 ஆயிரம் விளக்குகள் ஏற்றும் பத்ர தீப திருவிழாவும், 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசை அன்று லட்ச தீபமும் ஏற்றப்படுகிறது. பத்ரதீபம், லட்ச தீப விழாக்களின் போது மணி மண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றப்படுகிறது.
அன்னசத்திரங்கள்-மடங்கள்
நெல்லையப்பர் கோவிலை சுற்றிலும் பல்வேறு அன்ன சத்திரங்களும், மடங்களும் அமைந்துள்ளன. தொண்டை மண்டல ஆதீன மடம், தெற்கு மடம், ஈசான தம்பிரான் மடம், செங்கோல் ஆதீன மடம், மேல மடம், லாலா சத்திரம் முக்கு சேக்கிழார் மடம், உமையொருபாகம் குருக்கள் மடம், திருநாவுக்கரசர் மடம் உள்பட 75-க்கும் மேற்பட்ட மடங்களும், அன்னதான சத்திரங்களும் உள்ளன.
கோவிலை சுற்றி தெருக்களின் பெயர்கள் காரணப் பெயர்களாக...
Read moreஅருள்மிகு காந்திமதி அம்மன் திருநெல்வேலி.
பொது தகவல்: பிரகாரத்தில் கன்னி விநாயகர், நந்தி தேவர், பாண்டியராஜா சன்னதிகள் உள்ளன. பிட்சாடனர், ரிஷிபத்தினியர் உருவங்கள் கல்லில் வண்ணந்தீட்டப்பட்டுள்ளன. அகத்தியர் பிரதிஷ்டை செய்த சால்வடீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி சற்றுத் தாழ்வில் உள்ளது. நெல்லையப்பர் கோயிலுக்குள் பொற்றாமரைக் குளமும், நடுவில் நீராழி மண்டபமும் உள்ளது. இக்கோயிலில் 96 தூண்கள் உடைய ஊஞ்சல் மண்டபம், மகாமண்டபம், நவகிரக மண்டபம், சோமவார மண்டபம், சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் ஆகிய மண்டபங்களில் அழகிய சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. நாட்டிலேயே மூன்றாவது பெரிய திருத்தேர் நெல்லையப்பர் திருத்தேர். அரியநாத முதலியாரால் ஏற்படுத்தப்பட்ட ரதவீதிகளில் 1505-ல் முதல்முறையாக தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. இக்கோயிலில் உள்ள பொள்ளாப்பிள்ளையார் இதனை மலைமண்டலத்தைச் சார்ந்த முந்திக் கோட்டு வீரம் அழகிய பாண்டிய தேவன் உருவாக்கினார் என்று கல்வெட்டில் எழுதப் பெற்றுள்ளது. பிள்ளையாருக்கு பிள்ளைத்தூண்டு விநாயகர் என்றும் ஒரு பெயர் உண்டு. நெல்லை மக்கள் அம்பாள் காந்திமதியை அம்மை என்றும், நெல்லையப்பரை அம்மையப்பர் என்றும் அழைக்கின்றனர்.
வெண்ணிற ஆடை அம்பிகை:காந்திமதிக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிற புடவையிலேயே காட்சி தருகிறாள். இறுதிக்காலத்தில் உலகம் அனைத்தும் அம்பிகையிடம், ஐக்கியமாவதை உணர்த்தும்விதமாக இவ்வாறு காட்சி தருவதாக ஐதீகம்.
தனித்தனி பூஜை: நெல்லையப்பர் கோயிலில் சுவாமிக்கு தனி ராஜகோபுரமும், அம்பாளுக்கு தனி ராஜகோபுரமும் உண்டு. இரண்டு சன்னதிகளையும் மிக நீளமான சங்கிலி மண்டபம் ஒன்று இணைத்து வைக்கிறது. பார்ப்பதற்கு தனித்தனி கோயில்கள் போன்ற உணர்வு ஏற்படும். பொதுவாக கோயில்களில் சுவாமி, அம்பாள் இருவருக்கும் ஒரே ஆகமப்படிதான் பூஜை நடக்கும். ஆனால், இங்கு காந்திமதி அம்பாள் தனிக்கோயிலில் இருப்பதால் காரண ஆகமப்படியும், நெல்லையப்பருக்கு காமீக ஆகமப்படியும் ஆறு கால பூஜை நடக்கிறது.
காந்திமதி சீர் : பெண்கள், திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சீர் கொண்டு செல்வதுபோல, காந்திமதி அம்பிகையும் தனது திருக்கல்யாணத்தின் போது, சீர் கொண்டு செல்கிறாள். ஐப்பசி பிரம்மோற்ஸவத்தின் முதல் பத்து நாட்கள் அம்பாள், சிவனை மணக்க வேண்டி தவமிருப்பாள்.
பத்தாம் நாளில் கம்பை நதிக்கு எழுந்தருள்வாள். 11ம் நாள் மகாவிஷ்ணு, தன் தங்கையை மணந்து கொள்ளும்படி சிவனை அழைப்பார். சிவனும் அவரது அழைப்பை ஏற்று, அம்பிகையை மணம் செய்வார். அப்போது பக்தர்கள், மணமக்களுக்கு திருமண ஆடைகள் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.
12ம் நாளிலிருந்து இருவரும், 3 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் காண்கின்றனர். 14ம் நாள் இரவில் சுவாமியும், அம்பாளும் மறுவீடு செல்கின்றனர். அப்போது அம்பிகை அப்பம், முறுக்கு, லட்டு என சீர் பலகாரங்கள் கொண்டு செல்கிறாள். இதனை, "காந்திமதி சீர்' என்பார்கள்.
அன்னம் பரிமாறும் அம்பிகை : இக்கோயிலில் காந்திமதி அம்பாள், கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்பாள் சன்னதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு, சாம்பார் சாதம், ஊறுகாய் என வகைவகையான நைவேத்யங்களை சிவன் சன்னதிக்கு கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர். இப்பூஜை முடிந்தபின், அம்பாளுக்கு அதே நைவேத்யம் படைத்து...
Read moreதிருநெல்வேலி என இவ்வூர் அழைக்கப்படுவதற்கு மரபுவழிக் கதையொன்று உள்ளது:
முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராகத் திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியைச் சோதிக்கச் சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் இறைவனின் நைவேத்தியத்திற்காகத் தினமும் வீடு வீடாகச் சென்று நெல் சேகரித்து வருவார். ஒருநாள் சேகரித்த நெல்லைச் சன்னதி முன் உலரப் போட்டுவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.
குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழைத் தண்ணீரில் நெல் நனைந்துவிடப் போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு அசந்தார்.
மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வேதபட்டர், இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தைக் காணவிரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் ஆச்சரியப்பட்டார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி எனவும்...
Read more